போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடந்த நேரத்தில்... அயனாவரம் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அதற்கு முன்பாக ஜெ. நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் தற்கொலை செய்துகொண்டார். முதல்வரின் கைவசமுள்ள காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

police2011-ஆம் ஆண்டு பேட்ஜ் காவலர் குழுவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், பணியில் சேரும்போதே உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் புதுக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2014-ஆம் ஆண்டு அயனாவரம் கே-2 காவல்நிலைய பணிக்கு மாற்றப்பட்டார். டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த சதீஷுக்கு திருமணம் ஆகவில்லை.

சதீஷ் ஸ்பெஷல் டூட்டியாக இரவுநேர காவல் வேலை பார்த்துவந்தார். வழக்கம்போல் மார்ச் 6-ஆம் தேதி இரவு காவல்நிலையம் வந்த சதீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவியிடம் சென்று "தனி அலுவல் உள்ளது' எனக் கூறி பிஸ்டலைக் கேட்டிருக்கிறார். பிஸ்டலைப் பெற்றுக்கொண்ட சதீஷ், ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து அதில் அவசர அவசரமாக சில வரிகளை எழுதியுள்ளார்.

பின் ஏதோ நினைத்துக்கொண்டதுபோல் பிஸ்டலை தன் நெற்றியில் வைத்துப் பார்த்திருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிரஞ்சீவி, ""சார் வேண்டாம்... என்ன செய்றீங்க?''’என பதறியிருக்கிறார். அதனால் நெற்றியிலிருந்து பிஸ்டலை எடுத்த சதீஷ், துப்பாக்கியை சிரஞ்சீவியை நோக்கி நீட்டியிருக்கிறார். பின் துப்பாக்கியுடன் காவல் நிலையத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்.

Advertisment

இதையடுத்து சமாதானமடைந்த சிரஞ்சீவி, தன் சீட்டில் அமர்ந்திருக்கிறார். அந்த நிம்மதி சில நிமிடங்களுக்குக்கூட நீடிக்கவில்லை. காவல்நிலைய வாசலுக்குச் சென்ற சதீஷ், தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிரஞ்சீவி தகவல் கொடுத்ததையடுத்து காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் அன்பு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்துகொள்வதற்குமுன் எழுதிவைத்த கடிதத்தில், "எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என எழுதியிருந்ததோடு, குடும்பத்தினருக்கு விவரம் தெரிவிக்க வசதியாக அவர்களது தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டிருந்தாராம்.

ஜெ. நினைவிடத்தில் தற்கொலை செய்துகொண்ட அருண்ராஜ், இரவுநேர காவல் பணி செய்துவந்தவர். அது மூன்று காவலர்களால் மூன்று, மூன்று மணி நேரங்களாகப் பார்க்கப்பட வேண்டியது. ஆனால், அருண்ராஜ் மட்டுமே அதை தனியாகச் சமாளித்து வந்திருக்கிறார். சதீஷும் இரவுநேரப் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் துணை ஆய்வாளர் ஆறுமுகம் தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் விடுப்பு கிடைக்காததால் வேலையை ராஜினாமா செய்தார். பின்னர் உயரதிகாரிகள் சமாதானப்படுத்தி, பணிக்குத் திரும்பச் செய்தனர். பள்ளிக்கரணை காவலர் பாரதி, 10 நாட்களாக தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் விடுப்பு கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வாட்ஸ்அப்பில் பேசியது அதிர்வை ஏற்படுத்தியது.

காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் வாட்ஸ்-அப் பகிர்வொன்றில் குறிப்பிட்டிருந்த தகவல் கவனத்துக்குரியது. 30 ஆண்டுகள் பணிக்காலத்தில் 9 மாவட்டங்களுக்கு, 24 இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பணிமாறுதல் நடக்கும் ஒவ்வொரு முறையும் குடும்பம், பொருட்களை மாற்றுவதுடன், பிள்ளைகளை பள்ளிக்கூடம் மாற்றுவது முதல் இதர நடைமுறைச் சிக்கல்கள். பிறகெப்படி அவர்கள் நிம்மதியாக பணியில் கவனம் செலுத்தமுடியும்?

காவல்துறைக்குள் மட்டுமே பல்லாயிரக்கணக்கான புகார்கள். இவற்றை விசாரித்து நியாயம் வழங்கினாலும், எப்போதும் ஒருதரப்பு அதிருப்தியாகவே உணரும். தனியார் வழக்கு, மனித உரிமை ஆணையம், நீதிமன்றக் கண்டனம் எதுவாக இருந்தாலும் விசாரணைக்கு அழைக்கப்படும்போது, அதனை சொந்தச் செலவில்தான் காவலர்கள் எதிர்கொண்டாகவேண்டும். இதுதவிர சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.

""அதிகாரப்படி நிலையால் கட்டப்பட்டது காவல்துறை. மேலதிகாரிக்குப் பணிவதே முதன்மையான கடமையாகும். இதனால் கீழ்நிலையில் பணிசெய்பவர்கள், அதிகாரத்துக்குக் கீழ்படிதலால் ஏற்படும் மனச்சுருக்கம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள காவலர்களுக்கு முறையான கவுன்சிலிங் தேவையென்கிறார்கள்'' மூத்த காவலர்கள் சிலர்.

தன்னுடைய ஆளுகையின்கீழ் வரும் துறையில் நிகழும் தொடர் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளை வகுப்பதுதான் முதல்வருக்கு அழகு. செய்வீர்களா முதல்வரே?

-அருண்பாண்டியன்

காவலர் டைரி குறிப்பு!

சட்டம்-ஒழுங்கில் வேலை பார்க்கும் ஒரு போலீஸ்காரர் காலை 7 மணிக்கு பணிக்குச் செல்கிறார் என்றால், பிற்பகல் 2 மணிக்குத்தான் சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் செல்ல முடியும். பிறகு 5 மணிக்கு ஸ்டேசன் சென்றால், இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்ப முடியும். இது வழக்கமான டியூட்டி. ஆக வீட்டில் தனது குழந்தைகளோடு அவரால் நேரம் செலவிடமுடியாது.

ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம், இந்த விடுப்பும் மேலதிகாரி மனது வைத்தால் மட்டுமே முடியும். இந்த 12 நாட்களுக்கு சம்பளம் உண்டு; ஆனால் உணவுப்படி கிடையாது.

"தற்கொலை சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், காலி பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு மாதத்தில் ஒரு நாளாவது கட்டாய விடுப்பு தரவேண்டும். எல்லா போலீஸ்காரர்களுக்கும் மனத்திறன் பயிற்சி அளிப்பது அவசியம்' என்கிறார் சிவகாசியில் ஓய்வுபெற்ற ஏட்டு ஒருவர்.

-சி.என்.ஆர்.